கோவை புறநகர் பகுதியில் நேற்று காலை முதலே வெயில் ஆனது வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் மாலை வேளையில் கரும் மேகங்கள் சூழ்ந்து சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம் போல தேங்கியது. மேலும் சாக்கடை நீருடன் மழை நீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர் கடந்த ஒரு மாத காலமாக ஆடிப்பட்டத்தில் நடவு செய்த விவசாயிகள் மழை வேண்டி காத்திருந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோவை புறநகரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.