கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் உள்ள மாதம்பட்டி, மேல் சித்தரை சாவடி, தெனமநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நொய்யல் நதிக்கரை ஓரங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்ல மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிசாமி கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் வழித்தடம் குறித்த முழு விவரங்களை மின்சார வாரியம் இதுவரை வழங்கவில்லை. ஆனால், பல விவசாயிகளின் நிலங்களில் அவர்களது அனுமதியின்றி மின்சார பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது, என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்தபோது, இத்திட்டம் குறித்து தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும், விஷயத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். விவசாயிகள் சங்கம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மின்வாரியம் மற்றும் விவசாயிகளுடன் கூட்டம் நடத்தி, திட்டத்தின் நோக்கங்களை விளக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் அனுமதியின்றி திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என்ற சட்ட விதிகளை மின்வாரியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நேற்று (செப் 16) மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.