கோவை: வீட்டுமனை பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை!

71பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கோரி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் திரளாக வந்து நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் விடுதலை முன்னணி அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சூலூர் வட்டாரத்தைச் சேர்ந்த சோமனூர், இந்திரா காலனி, ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, குடும்ப எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக குடியிருக்க போதுமான இடமில்லை என்றும், சொந்தமாக வீடு வாங்கும் வசதி இல்லாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழக முதலமைச்சர், அரசு துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரிடமும் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை என்றும், தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்கள் இருந்தும் அவற்றை மீட்டு பட்டா வழங்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி