கோவை, நீலாம்பூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சின்னத்திரையில் தனது தனித்துவமான குரலாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பெற்ற நடிகை சௌந்தர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் திரளாக கூடியிருந்த மாணவ மாணவிகளிடையே உரையாற்றிய சௌந்தர்யா, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பின்னர் மாணவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க, தனது சொந்தக் குரலில் "பூக்கள் பூக்கும் தருணம்" என்ற இனிமையான பாடலை பாடினார். சௌந்தர்யாவின் மயக்கும் குரலில் பாடலை கேட்ட மாணவர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது மிகவும் பிரபலமடைந்த தனது நடன அசைவை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மேடையில் ஆடி காட்டினார். நடிகை சௌந்தர்யாவின் நடனத்தை கண்ட மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவின் நிறைவாக, கல்லூரி குழுமத் தலைவர் திரு. இ எஸ் கதிர், செயலாளர் திருமதி. லாவண்யா மற்றும் கல்லூரி முதல்வர் திருமதி. கற்பகம் ஆகியோர் இணைந்து நடிகை சௌந்தர்யாவுக்கு நினைவுப் பரிசை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சிறப்பு விருந்தினர் சௌந்தர்யா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.