கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டம்பாளையம் பகுதியில் நேற்று இரவு தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து (46) என்பவர் கிட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக இரண்டு லாரிகள் அங்கு வந்துள்ளன. அப்போது, லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் காளிமுத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநரும் அவருடன் வந்த மற்றொரு லாரி ஓட்டுநரும் சேர்ந்து, லாரியில் இருந்த ராடால் காளிமுத்துவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான லாரி ஓட்டுநர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.