

சூலூர்: அதிக கட்டணம் வசூல்- ஓட்டுநருடன் வாக்குவாதம்
கோவை மாவட்டத்தில் இருந்து தினமும் பல்வேறு மாவட்டங்களுக்கு 500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சூலூரில் இருந்து காங்கேயம் செல்வதற்கு வழக்கமாக 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 110 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து நேற்று முன்தினம் பயணித்தபோது ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குளிர்சாதனப் பேருந்துக்கு வசூலிக்கக்கூடிய கட்டணத்தை சாதாரண பேருந்தில் வசூலிப்பதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். குளிர்சாதன பேருந்தில் பயன்படுத்தப்படும் பயணச்சீட்டின் இயந்திரத்தை இந்த பேருந்தில் பயன்படுத்துவதால் கட்டணம் அதிகமாக இருந்ததாக ஓட்டுனர் ஒப்புக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.