கோவை: குற்றாலத்தில் 2 நாட்களில் 5746 சுற்றுலா பயணிகள் விசிட்
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், கடந்த இரண்டு நாட்களில், 5, 746 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாரத்தில், திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, நீர்வீழ்ச்சியில் குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக, சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்திலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தீபாவளி பண்டிகையன்று, 2, 409 சுற்றுலா பயணிகளும்; நேற்று, 3, 337 சுற்றுலா பயணிகளும் என, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 5, 746 சுற்றுலா பயணிகள், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.