திருமலையம்பாளையம் பேரூராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் ரமேஷ்குமார் நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளார். மனுவில் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரு காலேஜ் ஆப் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வரும் நேரு ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆகிய தனியார் சுயநிதி கல்லூரிகள் 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதே கல்வி குழுமம் நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2016-17இல் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விதிகளை மீறி கூடுதலாக கட்டிடங்களை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக சுயநிதி பள்ளியை நடத்தி வருகிறது. விதிகளை மீறி கட்டிடங்களை அமைத்துள்ள மேற்படி தனியார் சுயநிதி பள்ளியை ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தி, 7 ஆண்டுகளுக்கான உரிய சொத்து வரியை செலுத்தும் வரை மூன்றாம்தளம் மற்றும் நான்காம்தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய இணைய வழி ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்குமார் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.