முறையற்ற மனநலக் காப்பகத்திற்கு சீல்!

79பார்த்தது
கிணத்துக்கடவில் உள்ள சென்றாம்பாளையத்தில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது 39 நபர்கள் மீட்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனநல காப்பக மையத்திற்கு மாற்றப்பட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா ஆகியோர் இந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, அதிகாரிகள் பல குறைபாடுகளை கண்டறிந்தனர். ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிலருக்கு காலில் இரும்பு விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தன. மேலும், இந்த காப்பகம் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் உத்தரவின் பேரில், காப்பகத்தில் இருந்த 30 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உள்பட 39 பேர் அரசு அங்கீகரிக்கப்பட்ட மனநலக் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இந்த முறைகேடான காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி