சேலத்தில் குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
சேலம் மூலபிள்ளையார் கோயில் வண்டிக்காரர் தெரு பகுதியில் குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேக்ராஜ் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று(அக்.24) இரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஷ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் இன்று(அக்.25) அதிகாலை 5 மணி அளவில் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அந்த பகுதியினர் மேலாளர் மாதேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தீ அதிக அளவில் பரவி குக்கர் உதிரி பாகங்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் அந்த நிறுவனத்தில் மேற்கூரை பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது. மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.