சென்னை: திமுக கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட உத்தரவு
கருணாநிதியின் மருமகனும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.,10) முதல் மூன்று நாட்களுக்கு திமுக கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் இன்று காலை உயிரிழந்தார். கட்சி தொடங்கப்பட்ட காலம்தொட்டு கட்சியின் கொள்கை பரப்பியவரும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்சி அமைப்புகள் அனைத்தும் கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.