தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 3 அல்லது 4 வது வாரத்தில் தொடங்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப் 30 வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் பதிவான மழையின் அளவு 39 செ. மீ ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 33 செ. மீ இயல்பை விட 18% அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 19% வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் இயல்பான அளவாகவே கருதப்படுகிறது.
17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. 3 மற்றும் 4 வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும். தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.