இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் (86), வயது மூப்பு காரணமாக கடந்த 22-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.
இதையொட்டி, வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்துக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, க. பொன்முடி, பி. கே. சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.