சென்னை கோயம்பேட்டில் வெவ்வேறு இடங்களில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்பட்டதால் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை மலிவு விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. அதேநேரம், அதிகளவில் மக்கள் கூடுவதால் நெரிசல் ஏற்பட்டு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிரமமும் ஏற்பட்டது.
தற்போது கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு பொரி மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தையில் பொரி ஒரு படி ரூ. 20, உடைத்த கடலை, நாட்டு சர்க்கரை பாக்கெட்டுகள் சேர்த்த பொரி ரூ. 30, 5 கிலோ பொரி மூட்டை ரூ. 400, 6 கிலோ ரூ. 500-க்கு விற்கப்படுகிறது. வாழைக்கன்று உயரத்துக்கு ஏற்ப 10 கன்றுகள் கொண்ட கட்டு ரூ. 80 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகிறது. தென்னை தோரணங்கள் 50 கொண்ட கட்டு ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.