சென்னை: கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: பழனிசாமிக்கு அமைச்சர் பதில்
எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம் என்று கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவத்தில் இபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது? எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே. என்ற ஆத்திரம்தான் காரணம். எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ. 100 சிறியவர்களுக்கு ரூ. 50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.