ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்: உதயநிதி

80பார்த்தது
கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் விபத்தில் காயமுற்று, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் விபத்து & அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.

காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் விவரம் குறித்து, மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தோம்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

நன்றி ஏஎன்ஐ

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி