குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்துகிற நெய்யில் மிருகக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நிறுவனம் தான் பழனிக்கும் நெய் சப்ளை செய்கிறது.
எனவே, இந்த குற்றச்சாட்டில் இருந்து அந்நிறுவனம் விடுதலையாகும் வரை தமிழகத்தில் எந்த கோயிலுக்கும் அந்நிறுவனத்தில் இருந்து நெய் வாங்க கூடாது. மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் பழனி கோயிலின் தக்காராக உள்ளார். எனவே, அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதை கேட்டால் பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் மற்றும் இந்து கோயில்களின் வருமானத்தால் தான் திமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது.
2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இதனை மீட்க இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்திருக்கிறது? இந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கும், அழிப்பதற்கும் ஒரு அரசாங்கமா? என்று கூறினார்.