ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நிபந்தனை விதிக்க கூடாது: ஐகோர்ட்

80பார்த்தது
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 58 இடங்களில் வரும் அக். 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி. எதிர்கொள்கை கொண்ட பகுதி என கூறி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொது சாலை என்பதற்காகவும் அனுமதி மறுக்கக்கூடாது என நீதிபதி தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதமே இந்த நீதிமன்றம் நிபந்தனைகளை வகுத்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனைகளைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல புதிதாக எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது.

சாயர்புரத்தில் வரும் அக். 20-ம் தேதியன்று ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதால் அங்கு அனுமதி வழங்க வேண்டும். கடந்தாண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தப்படாத நிலையில் சிட்லபாக்கத்தில் அனுமதி கோரினால் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி