விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், விமானப் படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங், விமான பயிற்சிப் படைப்பிரிவு தளபதி மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப்படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மார்ஷல் கே. பிரேம் குமார், தாம்பரம் விமானப் படைத் தளபதி ரதீஷ் குமார் உள்ளிட்டோருடன் லட்சக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்தநிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.