துறைமுகம்-மதுரவாயல் சாலைப் பணி.. அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

67பார்த்தது
சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெற உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ. வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்நிலையில், அப்பணிகளில் உள்ள இடர்பாடுகளை களையும் வகையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் ஆலோனைக்கூட்டம் நேற்று(செப்.23) நடைபெற்றது. கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று, சாலைப் பணிகளில் நிலஎடுப்பில் ஏற்பட்ட காலதாமதங்கள் குறித்து விவாதித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் எ. வ. வேலு, சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெற உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாமல்லபுரம் முதல் முகையூர் வரை, 31 கி. மீ. சாலைப் பணி தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடித்து பணிகளை தொடங்க வேண்டும் என கூறினார். ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலர் இரா. செல்வராஜ், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை செயலர் பெ. அமுதா, நிலநிர்வாக ஆணையர் கே. எஸ். பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.