விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 3-வது நாளாக இன்றும் நடைபெற்றது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப் படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 3-வது நாளாக இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை போல் முழு அளவிலான ஒத்திகை நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதுவது போல் மிக நெருக்கமாக வந்து சாகசங்களை நிகழ்த்தின. மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
எம்ஐ-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணை கைதிகளை மீட்பது போன்ற சாகச காட்சிகளை செய்து காட்டினர். சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியபடி சாகசத்தில் ஈடுபட்டனர்.