சென்னை: திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர் - இபிஎஸ்
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று, மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.