தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது, அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது, அதிமுக பல புயல்களை கண்டதுள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை, ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியேகூட சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார்.
அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வர் ஸ்டானின் தொகுதியில் தேங்கியுள்ள நீரே வடியாமல் கிடக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள நீரை எப்படி இவர்கள் வடிய வைக்கப் போகிறார்கள் என்று அவர் கூறினார்.