சென்னை: கருணாநிதி பெயரில் மாநிலம் முழுவதும் அவசியமற்ற பணிகள் - இபிஎஸ்
கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்துக்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.