ஆவடி: பதவி உயர்வுக்காக நடந்த பயிற்சியால் பறிபோன உயிர்
ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிரபாகர் /53. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் புலனாய்வு பணியில் பணியாற்றியவர் தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று பயிற்சி பெற்று வருகிறார். தற்போது அவருக்கு வயது 53. சுமார் 8 வருடங்கள் தாமதமாக பதவி உயர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆவடி ஆயுதப்படை வளாகத்தில் இதற்காக உடல் தகுதி மற்றும் அலுவலக பணி கையாள்வது குறித்த பயிற்சி கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக காலையில் பயிற்சி அணிவகுப்புகள் முடிந்ததும் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று காலை உடற்பயிற்சியின் போது திடீரென சோர்வு ஏற்பட்டு பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபாகரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகர் இறந்து போனார். பிரபாகரின் உடலை கைப்பற்றிய ஆவடி போலீசார் உடல்கூறு ஆய்விற்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.