திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்த காட்டன் என்பவர் 6வழி சாலை கட்டுமான பணிகள் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் இரவு நேர காவலாளியாக பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரும்பு திருடும் போது தட்டிக்கேட்டதால் இரும்பு ராடால் அடித்தும், அரிவாளால் வெட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் உட்பட 3பேரை பெரியபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளி வந்த சஞ்சய் நாள்தோறும் பெரியபாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். தந்தையை அரிவாளால் வெட்டிய சஞ்சய் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து நடமாடுவதை கண்டு ஆத்திரமடைந்த காட்டனின் மகன்களும், அவரது நண்பர்களும் பேட்டைமேடு பகுதி அருகே காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த சஞ்சய்யை வழி மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெரியபாளையம் போலீசார் சஞ்சய்யை மீட்டு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டனின் மகன்கள் சின்னராசு இன்பநாதன் வினோத் கூட்டாளி செந்தமிழ்செல்வன் ஆகிய 4பேரை பெரியபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.