சிவகாசி: தீபாவளி விடுமுறைக்கு பின் மீண்டும் பட்டாசு ஆலை திறப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வெம்பக்கோட்டை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றாலும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஓய்வறியா மனிதர்களை கொண்ட ஊர் சிவகாசி. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 6 ஆயிரம் கோடி விற்பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைப்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த மாதம் 29ம் தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைகளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அறைகளுக்கு வர்ணம் பூசுவது, செடி, கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் உரிமையாளர், தொழிலாளர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து உற்பத்தி பணிகள் தொடங்கினர் மேலும் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்காக பெறப்பட்ட ஆர்டர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை ஆலை உரிமையாளர்கள் தொடங்கினர். ஒரு மாத விடுமுறை முடிந்து மீண்டும் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டதால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.