சிவகாசி: முருகன் கோவில் சூரசம்ஹார விழாவில் குவிந்த பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியிலிருக்கும் முருகன் கோயில்களில் நேற்று இரவு நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் முருகன், சூரனை சம்ஹாரம் செய்த காட்சியை பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மகா கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 2ஆம் தேதி அன்று கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று இரவு நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார விழா நடந்தது. முதலில் கஜமுக சூரனையும், பின்பு சிங்கமுக சூரனையும், 3வதாக சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்தார். சிவகாசி, திருத்தங்கல் ரதவீதிகளில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. சூரசம்ஹார விழாவை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இதே போன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், ரிசர்வ்லயன் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.