
விழுப்புரம்: ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினார்: மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டம், பிரதம மந்திரியின் ஜன்மன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களுக்குச் சென்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வறிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஜெ. இ. பத்மஜா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா, துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.