
வேலூர்: கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு; மக்களே உஷார்
வேலூர் சத்துவாச்சாரி ஆர். டி. ஓ. சாலை 12-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் வீட்டின் முன்பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடந்த 12-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சந்தோஷ்குமார் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் கடையில் பணம் வைத்திருந்த மேஜை டிராயரை பூட்டவில்லை. சிறிதுநேரத்துக்குப் பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு கடைக்கு வந்து மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். அதில் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அசோகன் மகன் குணா என்ற கடா (வயது 20) என்பவர் சந்தோஷ்குமாரின் கடையில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணாவை கைது செய்தனர். இவர் மீது பல குற்றவழக்குகள் வேலூர் வடக்கு உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.