வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய குப்பத்தாமோட்டூர் கிராமத்தில், ஊராட்சி மன்ற கட்டடம் இல்லாததால் குடியரசு தின விழாவான இன்று தேசியக்கொடி ஏற்றாமல் கிராம சபை கூட்டத்தை நடத்த அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து அறவழியில் கிராமசபை கூட்டத்தில் அமர்ந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனகூறி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கலைந்துச் சென்றனர்.
கிராமத்திற்கு ஊராட்சி மன்ற கட்டடம், கால்நடை மருத்துவமனை, கழிவுநீர் கால்வாய், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரிக்கால்வாய் எங்கே என்று கேள்வி எழுப்பியும், அடிப்படை வசதிகள் கேட்டு பதாகைகள் ஏந்தியும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
பின்னர், குப்பத்தாமோட்டூர் கிராம சபைக்கு வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் அளிக்காத நிலையில் வேறு வழியின்றி அரசு அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.