புவனகிரி: பா. ம. க. வினர் ஊர்வலமாக சென்று மனு அளித்ததால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 10 மணி அளவில் பா.ம.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதாக தெரிவித்தனர். அப்போது ஊர்வலமாக செல்லக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதனால் பா.ம.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று புகார் மனு அளித்தனர்.