தூத்துக்குடி மீனவர்கள் 10 பேரை பிடித்து விசாரணை
லட்சத் தீவின் தலைநகரான கவரட்டி தீவு கடலில், ஒரு குறிப்பிட்ட பகுதிவரையில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 24) காலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் கொச்சியில் இருந்து சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஒரு விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினர், அங்கு சட்ட விரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்குச் சொந்தமான படகு என்பதும், கடந்த 16ஆம்தேதி தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றதும் தெரியவந்தது. அதில் ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த முத்துபாண்டி, பழனி வலசையைச் சேர்ந்த ராஜசேகர், தருவைகுளத்தைச் சேர்ந்த சரவணன், மிக்கேல், அந்தோணி, வேம்பாரைச் சேர்ந்த அசோக், மில்டன், வெள்ளப்பட்டியைச் சேர்ந்த காளி, கீழவைப்பாரைச் சேர்ந்த விஜயன், தாளமுத்துநகரைச் சேர்ந்த பிரபு ஆகிய 10 பேரையும் பிடித்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.