திருச்செந்தூர்: குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க போலீசார் நடவடிக்கை
திருச்செந்தூரில் பக்தர்கள் அழைத்து வரும் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க குழந்தைகளின் கையில் போலீசார் டேக் கட்டிவிட்டனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்புக்காக போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, கோவில் நுழைவு வாயிலில் சூரசம்ஹாரத்தைக் காண குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்களை காவல்துறையினர் அழைத்துப் பேசி, அவர்களது குழந்தைகளின் கையில் டேக் கட்டி விடுகின்றனர். அந்த டேக்கில், குழந்தையின் பெற்றோர் பெயர் மற்றும் மொபைல் நம்பரை எழுதுகின்றனர். இதன் மூலம் கூட்டத்தில் குழந்தைகள் ஒருவேளை காணாமல் போனால் அவர்களின் கையில் இருக்கும் டேக் மூலம் பெற்றோரின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.