அகில இந்திய விமான நிலைய ஆணையக்குழு தலைவர் சுரேஷ் தூத்துக்குடியில் விமான நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும். இதைத்தொடர்ந்து புதிய விமான நிலையத்திலிருந்து 120 பயணிகள் செல்லக்கூடிய விமானங்கள் இயக்கப்படும்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது. கிடைத்த உடன் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். தூத்துக்குடியில் புதிய விமான நிலையம் சேவை துவங்கிய பின்பு சிங்கபூர், மலேசியா, அரபு நாடுகள், தாய்லாந்து, போன்ற நாடுகளுக்கு தூத்துக்குடியில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கே தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து மற்றும் அரபு நாடுகளில் வேலை பார்ப்பதால் அந்த நாடுகளுக்கு விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து தினமும் மூன்று விமான சேவைகள் தற்போது உள்ளது. விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம் என அகில இந்திய விமான நிலைய ஆணையக்குழு தலைவர் சுரேஷ் தெரிவித்தார். பேட்டியின்போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் ராஜேஷ், விமான நிலைய மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.