பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு!

72பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்த நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன், கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய் (25), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம் (26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் ஐசக் பிரசாந்த் (26) மற்றும் செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஐசக் பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், சிகிச்சையில் இருந்த ஐசக் பிரசாந்த் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பட்டாசு ஆலை உரிமையாளரான ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி