தரமற்ற கற்கள்: ஒப்பந்ததாரை கண்டித்த கனிமொழி எம். பி.

55பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில், கனிமொழி எம். பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், வசவப்பபுரம் - கருங்குளம் கிராமத்தில் உள்ள குட்டைக்கல் கண்மாயில் ரூ. 75 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர், மதகு அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும், கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது தரமற்ற கற்களை பயன்படுத்திய ஒப்பந்ததாரை கனிமொழி எம். பி. , கண்டித்தார். தொடர்ந்து, காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உப்பாற்று ஓடையின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ. 14 கோடியே 88 லட்சம் மதிப்பில் நடந்து வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளையும், ஓடையின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிரந்தர சீரமைப்பு பணிகளையும் உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி