உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பேரூரணி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 363 ஊரக கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய நீர்த்தேக்கத் தொட்டியுடன் கூடிய மோட்டர் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளதையும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் சார்பில் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி வழங்கும் முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைகள் துறை- நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பேரூரணி முதல் மேலதட்டப்பாறை வரை செல்லும் சாலையில் ரூ. 279 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், பேரூரணி முதல் மேலதட்டப்பாறை சாலை வரை ரூ. 284. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.