தூத்துக்குடி: தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரமநாயகம், தெற்கு ரயில்வே, பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "வண்டி என் 12693 சென்னை- தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 30 வரை அதிகமான காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் 12694 தூத்துக்குடி- சென்னை முத்துநகர் அதிவிரைவு ரயில் அக்டோபர் 28 முதல் டிசம்பர் 8 வரை அதிகமான காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில் பெட்டிகள் திங்கள் முதல் புதன் வரை மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தப் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி-சென்னை இடையே திங்கள்கிழமை தோறும் சென்னை-தூத்துக்குடி இடையே செவ்வாய்க் கிழமை தோறும் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு உடனடியாக சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி-சென்னை, முத்துநகர் அதிவிரைவு ரயில் ரயில் அதிகமான காத்திருப்போர் பட்டியல் காணப்படுவதால் மேற்படி ரயில் பெட்டிகளை வைத்து சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.