வல்லநாடு அருகே சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி, வேளாண்மை கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆத்திமுத்து மகன் அண்ணாதுரை (56). இவர் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அண்ணாதுரை மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.