தஞ்சாவூர்: மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், மகாராஜபுரம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த பழைய தொகுப்பு வீடுகளை பழுதுபார்த்து தர வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை புதிதாக கட்டித் தர வேண்டும். கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜா தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம். ராம், எம். கதிரவன், கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மகராஜபுரம் கிராம மக்கள் பங்கேற்றனர்.