அய்யம்பேட்டை அருகே பைக் மீது பேருந்து மோதி வாலிபர் பலி
அய்யம்பேட்டை அருகே கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரதீப் (21) கோவையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாபநாசத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வழுத்தூரில் அரசு பேருந்து பிரதீப் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பிரதீப் அதே இடத்தில் இறந்தார். இதுபற்றி அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிமதி உள்ளிட்ட போலீசார் பலியான பிரதீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுநரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாபநாசம் டிஎஸ்பி முருகவேல், இன்ஸ்பெக்டர் ரவிமதி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போக்குவரத்து சீரானது. இதனால் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.