சிறையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்ப்பதற்காக நாள் தோறும் 100 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சிறைக்கு வந்து பிஸ்கட், பழம், ஆடைகளை வழங்கி செல்கின்றனர். நங்கநல்லூரை சேர்ந்த பார்த்திபன் வழிப்பறி வழக்கில் பழவந்தாங்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள இவரை பார்ப்பதற்காக நேற்று(செப்.18) இவரது தம்பி பாலாஜி அவரது நண்பர்கள் புழல் சிறைக்கு வந்துள்ளனர். அப்போது தமது அண்ணனிடம் கொடுத்து விடுமாறு பிஸ்கட், பழங்கள் அடங்கிய பையை சிறை காவலர்களிடம் கொடுத்துள்ளார். சிறை காவலர்கள் பையை சோதனை மேற்கொண்ட போது அதில் பேரீச்சம் பழத்திற்குள் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அதற்குள் போதை மாத்திரைகளை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதை மாத்திரைகளை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதே போல ஆலந்தூரை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் கிண்டி காவல் நிலைய அடிதடி வழக்கில் புழல் சிறையில் உள்ளார். இவரை பார்ப்பதற்காக இவரது நண்பர் பிரவீன் சிறைக்கு வந்து பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை கொடுத்துள்ளார். சிறை காவலர்கள் சோதனையில் பேண்டிற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணை கைதிகள், உறவினர்கள் மீது இருவேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.