சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்மந்தி பாஸ்கர் (எ) கட்டை பாஸ்கர் (58) என்பவர் புழலில் ஜெ. கிளப் என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் தொழில் செய்த போது பாஸ்கர் சுமார் ரூ. 2. 28கோடி பண மோசடி செய்ததாக மணிப்பூர் மாநிலம் இம்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற அனுமதி பெற்று புழல் கிளப்பில் இருந்த பாஸ்கரை கைது செய்தனர்.
சீருடை அணியாமல் இருந்ததால் பாஸ்கரின் மேலாளர் சந்தேகமடைந்து அளித்த தகவலின் பேரில் புழல் போலீசார் வந்து நடத்திய விசாரணையில் மணிப்பூர் போலீஸ் எனவும் பாஸ்கரை கைது செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பாஸ்கரையும், மணிப்பூர் போலீசாரையும் புழல் காவல் நிலையம் அழைத்து வந்து வாரண்டை உறுதி செய்தனர். அப்போது பாஸ்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாஸ்கரை மணிப்பூர் போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே செம்மர கடத்தல் வழக்குகளில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் ஆந்திர போலீசாரால் ஏற்கனவே கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.