வேலை வாங்கித்தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. காவல்துறையில் புகார்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 17 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் மனு அளித்துள்ளார். தஞ்சை அருகே பூதலூரை சேர்ந்த தமிழ்ச் செல்வன் (26) என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவது தொடர்பாக தஞ்சையில் 3 இடங்களில் தஞ்சை இருதயபுரம் சதீஸ்வரன் என்பவர் ஏஜென்ட் அலுவலகம் அமைத்து இருந்தார். அங்கு நான் சென்று வெளிநாட்டில் வேலை வாங்கித் தருமாறு கேட்டேன். அதற்காக சில லட்சங்களும் கொடுத்துள்ளேன். என்னைப்போல் மேலும் 6 பேர் வெளிநாட்டு வேலைக்காக பல லட்சங்கள் அவரிடம் கொடுத்தனர். மொத்தம் 7 பேரும் சேர்ந்து ரூ. 17 லட்சம் கொடுத்திருந்தோம். ஆனால் குறிப்பிட்டபடி சதீஸ்வரன் எங்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் பயன் இல்லை. எனவே நாங்கள் கொடுத்த பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், முறையான அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களையே அணுக வேண்டும். போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.