
தஞ்சாவூர்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல்
திருப்பனந்தாள் அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கள்ளப்புலியூர் கொந்தங்குடியில் வசிப்பவர் பிரபாகரன் மனைவி கீதா (60), இவரது மகள் பிரியங்கா. கடந்த பிப். 6 இல் தாயும் மகளும் இரவு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம ஒருவர் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த தாய், மகள் ஆகியோரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து கீதா திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் கரிகால்சோழன் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பறித்துச்சென்ற நகைகளின் மதிப்பு 12 சவரன் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் என்று போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது.