பணி மேம்பாடு ஊதியம் கோரி தஞ்சாவூர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளபடி பணியில் உள்ள ஆசிரியர்களின் இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டுக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்பதைத் தளர்த்த வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளபடி புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் ஏ. சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மண்டலச் செயலர் சொக்கலிங்கம், மண்டலச் செயலர் ஆர். பிரகாஷ்ராஜ், மண்டலப் பொருளாளர் ஸ்ரீதர் தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.