கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவெடுத்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஏஐடியுசி சந்திரகுமார், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கருணாநிதி, மாநில துணைச்செயலாளர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிவாணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இதில் நிர்வாக தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளான ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதிக்குள் மாத ஊதியம், பிஎஃப், இஎஸ்ஐ தொகைகள் உரிய கணக்கில் டிசம்பர் வரை செலுத்தப்பட்டுள்ளது. சீருடை, கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மார்ச் மாத இறுதிக்குள் வழங்குவதாக நகராட்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.