தஞ்சையில் சுற்றித்திரியும் காட்டு மாடை பிடிக்க நான்கு குழுக்கள் அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை கரந்தை அருகே கோடி அம்மன் கோவில், சுங்கான் திடல் பகுதியில் காட்டு மாடு சுற்றி வந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இந்த காட்டு மாடை கண்ட நாய்கள் எல்லாம் குறைத்ததால் காட்டு மாடு மிரண்டு ஓடியது. இதை சிலர் மாடிகளில் இருந்து தங்களது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர். இதேபோல் நாகை சாலை ஞானம் நகரில் காட்டு மாடு சுற்றியதை இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த தகவல் வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததும், வனத்துறையினர் அப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் அனந்தகுமார் தலைமையில் 20 பேர் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இந்த காட்டு மாடு இப்பகுதிக்கு எப்படி வந்தது என தெரியவில்லை. இதே போல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பூதலூர் அருகே வளம்பகுடி கிராமத்திற்குள் வந்த காட்டு மாடு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.