தஞ்சை அருகே பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
தஞ்சாவூர் கௌதம் நகரை சேர்ந்தவர் பிராங்க்ளின் பாரதி. இவரது மகன் ரோஷன் (20). இவர் திருமலை சமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பிடெக். படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கல்லூரிக்கு பைக்கில் ரோஷன் சென்று கொண்டிருந்தார். அப்போது, புறவழிச்சாலை பகுதியில் பார்க்கிங் இல்லாத இடத்தில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரோஷன் ஓட்டிச் சென்ற பைக் நிலை தடுமாறி லாரியின் பின்புறம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரோஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ரோஷன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் லாரி ஓட்டுநரான இரும்புதலைப்பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.